Friday, 17 February 2017

அச்சிட்டது அச்சுவெல்லம்!


Image result for achu vellam


அச்சுவெல்லம் அடித்து உடைத்த அனுபவம் இல்லாதவர் யார் தான் சொல்லுங்கள்? அம்மாவுக்கு ஓரளவேனும் உதவி செய்த பிள்ளையா நீங்கள்? கண்டிப்பாக அச்சுவெல்லம் உடைத்திருப்பீர்கள்.

பால் திரண்டது என் அக்கறை இன்மையால். வருத்தப்பட்டேன். தூக்கிக்கொட்டி அதை அவமானப்படுத்த விரும்பவில்லை. எனக்கு தான் இழிவு. திரட்டுப்பால் பட்டம் தந்ததை உயர்த்த முடிவு செய்தேன்.

கொஞ்சம் நீரை வற்றவிட்டேன், வற்றுவதுற்குள் பொறுமை இழந்தேன். மற்ற நீரை வடிகட்டினேன். இருந்ததென்னவோ அச்சு வெல்லம் தான். அதன் மண்டையில் அடித்து உடைக்க மனம் இல்லை. இருந்தாலும் இனிக்கும் திரட்டிப்பாலில் ஆசை. சீனி என்ற சர்க்கரை போடலாம், ஆனால் அது குறுக்கு வழி, நோய்க்கும் அது சுருக்கு வழி. எனவே அச்சுவெல்லம் தான் ஒரே வழி.

பார்த்தேன், முழு அச்சையே தூக்கி உள்ளே போட்டேன். இன்னொன்றையும் துணைக்குப் போட்டேன். விட்டு விட்டு கொஞ்சம் தட்டினேன், இல்லை தடவினேன், கரண்டியால். இரண்டு நான்கானது ஒரு சில நிமிடத்தில். என் குறிப்பறிந்து கொண்டது வெல்லம்.

அதை விட்டு மறந்து அங்கே இங்கே இரண்டு நிமிடம் போய் வந்தேன். திரும்ப எட்டிப் பார்த்தேன். முற்றிலும் கரைந்து திரண்ட பாலுடன் இரண்டற கலந்திருந்தது.
தட்டிக்கொடுத்தேன்! திரட்டுப்பாலை! அது கரையும் என்று நம்பியதால் எத்தனை அடி மிச்சம். அதுபோல் தானோ எல்லாமே? உறவுகளும், மாற்றம் வேண்டி அடிக்க இடிக்க, மாறும் ஆனால் அக்கம் பக்கமும் அதனோடு இடிபடும் அடிபடும். அதை விட அதன் சூழலை ஏற்றதாய் அமைத்துக் கொடுக்க அது நம் சொல் கேட்கும் தன்னையே கரைத்து மாறும்.

அச்சாய் சொன்னதே அச்சுவெல்லம்!

Thursday, 16 February 2017

குடம் சொல்லும் வரம்தன்னைச் சுற்றி வளரும் காடு
தானே தோன்றும் செடி கொடி
தயவாய் நட்ட நெல் நாற்று
தவழும் இடையில் கயல் பல.


மணம் கவழும் சில பூக்கள்
மனம் இழுக்கும் மாட்டுச் சாணம்
மடை திறந்த கால்வாய்கள்
மணல் வரப்புக் கிடையலே


நீர் தேடியே காத தூரம்
நீண்ட நடை நடக்க வேண்டும்
நிறைத்துக் குடம் தலை மேலே
நிலைக்குமாறு வைக்க வேண்டும்


அசையா வண்ணம் அமர்த்திய வாறு
அலை மோதா நிறை குடத்தை
அடுப்பு மூட்டி உலை வைக்க
அடுக்களைக்குக் கொண்டு சேர்ப்பர்


உரம் பாய்ந்து வேர் ஊன்றிய
ஊர் காக்கும் தேவியர்
உறக்கம் விழித்த கணம் முதலே
உடன் தொடரும் வேலைகள்


தண்ணீர் மட்டுமா சுமந்தனர்
தட்டில் இட்ட வெளுக்கும் துணி
தரம் தரமாய் தேய்க்கப் பாத்திரம்
தன் பிள்ளையும் இடுக்கில் சிலநாள்.


இயந்திரம் அன்றி வேறெதுவும் எங்கே
இத்தனை வேலை செய்யக் கண்டோம்?
இங்கே வந்து கண்ணில் நிறைப்போம்
இத்தகு சக்தி அடங்கிய பெண்ணை!

மீனாள் மணிகண்டன்

Saturday, 26 December 2015

தாயில் பலவகை! ஒரு தொடர்.

ஒரு தாய்க்கு தான் பெற்ற குழந்தைகள் தன் உறுப்புகளே போல. ஒன்றாய் இருந்தால் நலன்விரும்பும் அவள் எண்ணத்தில் முரண்பாடு வருவதில்லை. அதுவே, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றவளுக்கு தெரியும் சமநிலை என்பது என்ன என்று, பாரபட்சம் என்பது என்னவென்று. இரு கை சேர்ந்தால் தான் ஓசை. இரு கால் ஒரு திசை நோக்கி சென்றாலே முன்னேற்றம். இரு கண்கள் இருவேறு காட்சி காண விழைவது ஒண்ணாத காரியம். இவற்றை ஒருங்கிணைக்க உடலோ மனமோ எந்த விசேஷ முயற்சியும் செய்வதில்லை. அதுவே இயல்பு. அப்படிதான் தாயும், தான் பெற்ற குழந்தைகள் கூட ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்று விழைகிறாள். அதில் இடர் ஏற்பட அவளால் பொறுக்க முடிவதில்லை. பொறுக்காமலும் அவள் என்ன செய்யப் போகிறாள். செய்வதறியாது வேதனையே அடைகிறாள்.


தன் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் இணங்கி நட்போடும் அன்போடும் வாழும் போது தன்னைப்போல் பாக்யசாலி யாரும் இல்லை என்று உணர்கிறாள். தான் காத்து வந்த குஞ்சுகள், தனக்குப் பிறகும் ஒன்றோடொன்று துணையாகவும், உதவியாகவும், அணையாகவும் வாழும் என்ற எண்ணம் ஒரு பெரும் வலிமையை அவளுக்குத் தரும். அவர்கள் அருகருகே இருந்து போட்டி பொறமை வெறுப்பு என்று வாழ்ந்தால் அதைக் காண்பது போல் நரகம் இல்லை தாய்க்கு. இதை ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக, தன் குணம் புத்திக்குத் தகுந்தாற்போல் கையாள்கின்றனர்.


இதில் பல்வேறு விதமான தாய்மார்கள் ரகம் உண்டு...

அதனைப் பின்பு பார்ப்போம்

Sunday, 29 November 2015

தோசை சொல்லும் செய்தி

தோகை விரித்த மயில் போலே
தோசை விரித்து நாம் ஊற்ற
வேகும் சில நொடி காலத்தில்
வேகமாய்ப் பலதும் பேசிற்று

கைரேகை தனித்துவம்
கையெழுத்தும் அது போலே
இருவேறு ரேகைகள்
ஒருவருக்குப் பொருந்தாது

ஒருவர் கை தோசைபோலே
பிறர் தோசை இருப்பதில்லை
தாய் வீட்டு சீதனம் போலே
தானே வந்தது வார்க்கும் வாகும்

வெந்த தோசை எழுந்து நிற்கும்
வெளியில் நிற்கும் தட்டை நோக்கி
வேகா தோசை தானும் கல்லைவிட்டு
வேள்வி செய்தாலும் வருவதில்லை

நொந்த மனமும் அப்படியே
முந்திச் சென்று சரி செய்ய
ஒட்டி உபத்திரவம் செய்துவிடும்
விட்டுத் தானும் பிடித்தாலோ

தன்னிலை உணர்ந்து தானே வரும்
தனியத் தானும் சில மணிநேரம்
தகளிக்கே தந்திட வேண்டும்
தவிக்கும் மனங்கள் அமைதி பெரும்

பகிரும்   உணர்வுகளை மனிதனும்
பக்குவமாய்க் கையாள
பிய்ந்த தோசை போலே உறவுகள்
பிரிந்து செல்ல வாய்ப்பில்லை


மொழி ஒரு கடல்

கடலைப்  போலே மொழியாம்
கடையக் கூடத் தேவையில்லை
தொட்ட தெல்லாம் சொல்லாம்
தொகுக்க நாமே தயாரா?

பொருள் கேட்டு நிற்காது
பொருள் பொதிந்து பொங்கிடும்
அள்ளும் ஆர்வம் நமக்கிருந்தால்
அளவின்றி உவந்து தரும்

ஒவ்வொரு துளியும் நம்முடன்
ஒளிந்து ஆடும் ஆட்டம்
பிடித்து நாமும் கையாள
பிடித்துப் போய்விடும் நமக்கது


Friday, 27 November 2015

அளவே அமிர்தம்

தீபொறி பட்ட பஞ்சு மூட்டை
தீண்ட முடியாமலே போய்விடும் 

கருகி உருமாறி போனதும் 
திரும்பி வராது பஞ்சுத்திரி 

அனலாய் வீசும் கோபமுமே 
அழித்து விடும் அடுத்தவரை 

தண்ணீர் கொட்டி நனைத்தாலும் 
தொலைத்துவிடும் மென்மையை 

அதிகம் எதுவும் இல்லாமல் 
அளவாய் எல்லாம் காட்டியே 

பஞ்சைப் போலே காக்கவேணும் 
பந்தம் சொந்தம் அனைத்தையும்!


Thursday, 8 October 2015

காணவில்லைஎங்கே காணவில்லை
என் சின்னப் பிள்ளை,
மழை தூவும் மலர் போல
நகை தூவும் என் செல்வம்?

வளர்ந்த நீ என் முன்னே
வந்து நின்று பேசுகையில்
புதிய நபரைக் கண்டார் போல்
புரிந்து கொள்ள விழைகிறேன்.

தங்கம் உருமாறி வந்தாலும்
மங்காது ஒளி அன்றோ?
ஆங்காங்கே பல பெற்றோர்
இங்ஙனமே உணர்வாரோ?