Sunday 29 November 2015

தோசை சொல்லும் செய்தி

தோகை விரித்த மயில் போலே
தோசை விரித்து நாம் ஊற்ற
வேகும் சில நொடி காலத்தில்
வேகமாய்ப் பலதும் பேசிற்று

கைரேகை தனித்துவம்
கையெழுத்தும் அது போலே
இருவேறு ரேகைகள்
ஒருவருக்குப் பொருந்தாது

ஒருவர் கை தோசைபோலே
பிறர் தோசை இருப்பதில்லை
தாய் வீட்டு சீதனம் போலே
தானே வந்தது வார்க்கும் வாகும்

வெந்த தோசை எழுந்து நிற்கும்
வெளியில் நிற்கும் தட்டை நோக்கி
வேகா தோசை தானும் கல்லைவிட்டு
வேள்வி செய்தாலும் வருவதில்லை

நொந்த மனமும் அப்படியே
முந்திச் சென்று சரி செய்ய
ஒட்டி உபத்திரவம் செய்துவிடும்
விட்டுத் தானும் பிடித்தாலோ

தன்னிலை உணர்ந்து தானே வரும்
தனியத் தானும் சில மணிநேரம்
தகளிக்கே தந்திட வேண்டும்
தவிக்கும் மனங்கள் அமைதி பெரும்

பகிரும்   உணர்வுகளை மனிதனும்
பக்குவமாய்க் கையாள
பிய்ந்த தோசை போலே உறவுகள்
பிரிந்து செல்ல வாய்ப்பில்லை


No comments:

Post a Comment