Friday, 17 February 2017

அச்சிட்டது அச்சுவெல்லம்!


Image result for achu vellam


அச்சுவெல்லம் அடித்து உடைத்த அனுபவம் இல்லாதவர் யார் தான் சொல்லுங்கள்? அம்மாவுக்கு ஓரளவேனும் உதவி செய்த பிள்ளையா நீங்கள்? கண்டிப்பாக அச்சுவெல்லம் உடைத்திருப்பீர்கள்.

பால் திரண்டது என் அக்கறை இன்மையால். வருத்தப்பட்டேன். தூக்கிக்கொட்டி அதை அவமானப்படுத்த விரும்பவில்லை. எனக்கு தான் இழிவு. திரட்டுப்பால் பட்டம் தந்ததை உயர்த்த முடிவு செய்தேன்.

கொஞ்சம் நீரை வற்றவிட்டேன், வற்றுவதுற்குள் பொறுமை இழந்தேன். மற்ற நீரை வடிகட்டினேன். இருந்ததென்னவோ அச்சு வெல்லம் தான். அதன் மண்டையில் அடித்து உடைக்க மனம் இல்லை. இருந்தாலும் இனிக்கும் திரட்டிப்பாலில் ஆசை. சீனி என்ற சர்க்கரை போடலாம், ஆனால் அது குறுக்கு வழி, நோய்க்கும் அது சுருக்கு வழி. எனவே அச்சுவெல்லம் தான் ஒரே வழி.

பார்த்தேன், முழு அச்சையே தூக்கி உள்ளே போட்டேன். இன்னொன்றையும் துணைக்குப் போட்டேன். விட்டு விட்டு கொஞ்சம் தட்டினேன், இல்லை தடவினேன், கரண்டியால். இரண்டு நான்கானது ஒரு சில நிமிடத்தில். என் குறிப்பறிந்து கொண்டது வெல்லம்.

அதை விட்டு மறந்து அங்கே இங்கே இரண்டு நிமிடம் போய் வந்தேன். திரும்ப எட்டிப் பார்த்தேன். முற்றிலும் கரைந்து திரண்ட பாலுடன் இரண்டற கலந்திருந்தது.
தட்டிக்கொடுத்தேன்! திரட்டுப்பாலை! அது கரையும் என்று நம்பியதால் எத்தனை அடி மிச்சம். அதுபோல் தானோ எல்லாமே? உறவுகளும், மாற்றம் வேண்டி அடிக்க இடிக்க, மாறும் ஆனால் அக்கம் பக்கமும் அதனோடு இடிபடும் அடிபடும். அதை விட அதன் சூழலை ஏற்றதாய் அமைத்துக் கொடுக்க அது நம் சொல் கேட்கும் தன்னையே கரைத்து மாறும்.

அச்சாய் சொன்னதே அச்சுவெல்லம்!

Thursday, 16 February 2017

குடம் சொல்லும் வரம்தன்னைச் சுற்றி வளரும் காடு
தானே தோன்றும் செடி கொடி
தயவாய் நட்ட நெல் நாற்று
தவழும் இடையில் கயல் பல.


மணம் கவழும் சில பூக்கள்
மனம் இழுக்கும் மாட்டுச் சாணம்
மடை திறந்த கால்வாய்கள்
மணல் வரப்புக் கிடையலே


நீர் தேடியே காத தூரம்
நீண்ட நடை நடக்க வேண்டும்
நிறைத்துக் குடம் தலை மேலே
நிலைக்குமாறு வைக்க வேண்டும்


அசையா வண்ணம் அமர்த்திய வாறு
அலை மோதா நிறை குடத்தை
அடுப்பு மூட்டி உலை வைக்க
அடுக்களைக்குக் கொண்டு சேர்ப்பர்


உரம் பாய்ந்து வேர் ஊன்றிய
ஊர் காக்கும் தேவியர்
உறக்கம் விழித்த கணம் முதலே
உடன் தொடரும் வேலைகள்


தண்ணீர் மட்டுமா சுமந்தனர்
தட்டில் இட்ட வெளுக்கும் துணி
தரம் தரமாய் தேய்க்கப் பாத்திரம்
தன் பிள்ளையும் இடுக்கில் சிலநாள்.


இயந்திரம் அன்றி வேறெதுவும் எங்கே
இத்தனை வேலை செய்யக் கண்டோம்?
இங்கே வந்து கண்ணில் நிறைப்போம்
இத்தகு சக்தி அடங்கிய பெண்ணை!

மீனாள் மணிகண்டன்