Sunday, 29 November 2015

மொழி ஒரு கடல்

கடலைப்  போலே மொழியாம்
கடையக் கூடத் தேவையில்லை
தொட்ட தெல்லாம் சொல்லாம்
தொகுக்க நாமே தயாரா?

பொருள் கேட்டு நிற்காது
பொருள் பொதிந்து பொங்கிடும்
அள்ளும் ஆர்வம் நமக்கிருந்தால்
அளவின்றி உவந்து தரும்

ஒவ்வொரு துளியும் நம்முடன்
ஒளிந்து ஆடும் ஆட்டம்
பிடித்து நாமும் கையாள
பிடித்துப் போய்விடும் நமக்கது


Friday, 27 November 2015

அளவே அமிர்தம்

தீபொறி பட்ட பஞ்சு மூட்டை
தீண்ட முடியாமலே போய்விடும் 

கருகி உருமாறி போனதும் 
திரும்பி வராது பஞ்சுத்திரி 

அனலாய் வீசும் கோபமுமே 
அழித்து விடும் அடுத்தவரை 

தண்ணீர் கொட்டி நனைத்தாலும் 
தொலைத்துவிடும் மென்மையை 

அதிகம் எதுவும் இல்லாமல் 
அளவாய் எல்லாம் காட்டியே 

பஞ்சைப் போலே காக்கவேணும் 
பந்தம் சொந்தம் அனைத்தையும்!


Thursday, 8 October 2015

காணவில்லை



எங்கே காணவில்லை
என் சின்னப் பிள்ளை,
மழை தூவும் மலர் போல
நகை தூவும் என் செல்வம்?

வளர்ந்த நீ என் முன்னே
வந்து நின்று பேசுகையில்
புதிய நபரைக் கண்டார் போல்
புரிந்து கொள்ள விழைகிறேன்.

தங்கம் உருமாறி வந்தாலும்
மங்காது ஒளி அன்றோ?
ஆங்காங்கே பல பெற்றோர்
இங்ஙனமே உணர்வாரோ?


Thursday, 9 April 2015

பெண் ஒரு மாபெரும் சக்தி!



பெண்! தன்னை தேவைக்கு பயன் படுத்தும் இயந்திரம் போல் நடத்துவதாகச் சொல்வாள். எனினும் அவளே இயந்திரம் விழுங்கியவள் போல் உழைப்பாள். அன்பு பாசம் நேசம் நட்பு கோபம் என உணர்வுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேர் அவள்.
கணவனின் தேவையா, மறவாது செய்வாள்.
பிள்ளைகளின் ஆசையா, விரும்பி செய்வாள்.
பெற்றோருக்கு அவசியமா, செய்யாமல் விட மாட்டாள்.
கணவனின் பெற்றோர் உற்றார் தேவையா, விட்டுக் கொடுக்க மாட்டாள்.
தன் சகோதர சகோதரிகள் அவரது பிள்ளைகள் நாடினவா, தவறுவாள் இல்லை.
அடுத்த வீட்டு ஆச்சிக்கோ அவரைச் சேர்ந்தவருக்கோ ஒரு தேவையா நான் இருக்கிறேன் என்பாள்.
கோடி வீட்டு மக்களானாலும் தனக்கு உதவி செய்யும் வேலையாட்கள் ஆனாலும் அவளை நம்பலாம்.
அவளைக் காண்போருக்கு அவள் ஒரு உதாரணம். புரிந்து கொள்வது கடினம் தான் ஆனால் புரிந்து கொண்ட பின் அவள் ஒரு பெட்டகம்.
அவள் ஒரு சக்தி,
துவண்ட செடியை துளிர்க்கச் செய்யும் நீர்,
வலுவிழந்த மாளிகைக்குத் தூண்,
அந்த சக்திக்கு உரம் அன்பு,
அன்பு, அன்பின் வெளிப்பாடு மட்டுமே.
அதுவும் உண்மை அன்பு,
முகஸ்துதியை முற்றிலும் மறுக்கும் அன்பு.
இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும்!
எனினும் இதை எழுதத் தூண்டிய பெண்!
என்னைப் பெற்ற என் அன்னை
.

Tuesday, 7 April 2015

ஆசையே பக்தியாய்!

சின்ன சின்ன ஆசை சுமந்து
சிட்டாய்ப் பறந்த காலம் வேறு
ஆசை சற்றே முதிர்வு பெற
ஆழ்ந்து சிந்தையில் பதிந்து விடும்

வாழ்க்கையின் நோக்கமாய் மாறி விடும்
வாழ்ந்து காட்ட வெறி பிறக்கும்.
சிறகடித்து பறந்து வரும் ஆசைகளை
விரட்டாமல் சற்றே, நோக்கினால் என்ன?

இறை அன்பு கூட, பக்தியாய்
உருமாறி வந்திட்ட விருப்பம் அன்றோ!
மெருகடைந்த ஆவலே, பற்றாய் மாறி
திருவடியே சரண் ஆக வாழ்விக்கும்.



Tuesday, 27 January 2015

குழல் ஓசை

காற்றில் மிதந்து கந்தம் வரும்,
கனவு வரும் காதல் கூட வரும் (என்று சொல்வார்).
வரும், வருவது தங்குமா?
வந்த வழியே விடைபெறக்கூடும்.

காந்தமாய் இழுக்கும் கண்ணன்
கானமாய்ப் பொழியும் அவன் குழல்,
எனையும் சற்றே  பற்றாதோ?
நினைவில் நின்றே ஆளாதோ?

உருகும் பக்தர் சங்கமே
குறுகும் வாழ்வில் வேண்டியது.
கிருஷ்ணர் கதை சொல்லும் அழகில்
உருவகித்து அமர்த்துவார், பாகவதாள் தானுமே!

கதையில் லயித்து கேட்போரும்
அதைச் சொல்லிதானும் மகிழ்வோரும்
உள்ளவரை, இப்பூவுலகில் பக்தி,
வெள்ளமாய்ப் பாய்ந்திடும், நம்புகிறேன்!

Saturday, 24 January 2015

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !



மனம் அமைதியாய் இருக்கும் போதே செய்ய நினைப்பது அனைத்தையும் யோசிக்காமல் செய்து விட வேண்டும். அன்றேல், இந்த மனம் எப்போது எங்கே தாவும் என்று சொல்ல முடியாது.

முன்பெல்லாம் என் கோபத்தை ஆத்திரத்தை வார்த்தைகளில் எழுதி திட்டித் தீர்க்கும் நிறைவைப் பெறுவேன். சொல்ல முடியாமல் திணறுவது போல் தோன்றும். அந்தப் போராட்டம் சொல்லபோனால் என் வாழ்க்கையில் இருந்தது என்பதை விட என் மனதில் மட்டுமே இருந்து வந்துள்ளது. அந்த நிலையில் அது ஒரு வடிகாலாக இருந்தது.

இருப்பினும் அது பழக்கம் ஆகிவிட்டது, உணர்வுகளைப் பதிவு செய்வது. எனவே நல்ல உணர்வுகளையும் பதிவு செய்யத் தொடங்கினேன். வடிகால் என்பதற்காக அல்ல. மனம் கொள்ளவில்லை. என் நினைவாற்றல் நினைவகம் போதவில்லை. சேமிக்க ஒரு பெட்டகம் வேண்டியே வார்த்தைகளால் மாலை கோர்த்து சேர்த்து வைக்கிறேன். என் கணவர் பற்றி மட்டுமல்ல, பிள்ளைகள், பெற்றோர், தமக்கை, நண்பர், தோழியர், தெய்வம் அனைவரைப் பற்றியும்.